கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் பொலிஸ் காவலில்!
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (12) போராட்டம் இடம்பெற்ற இடத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கும், வணக்கத்திற்குரிய ராஜாங்கனையே சத்தரதன தேரர் தலைமையிலான மற்றுமொரு பிக்குகள் குழுவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் போராட்டப் பகுதியில் பதற்ற நிலை உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் ருவன்வெலிசாயவுக்கு அருகில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.