வீடுகளின் சூரிய மின்சக்தி மின்கல சேமிப்பு கட்டமைப்புக்கு ஒரு kWh-க்கு ரூ.25,000 மானியம்!
வீடுகளில் புதிதாக நிறுவப்படும் கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளுடன் மின்கல (Battery) சேமிப்பு கட்டமைப்புகளையும் நிறுவுவோருக்கு, ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு (kWh) ரூ.25,000 மானியம் வழங்குவதற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த முன்மொழிவை முன்வைத்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை ஊக்குவித்தல், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் தேசிய மின்சாரக் கட்டமைப்பில் ஏற்படும் சமநிலையின்மையைக் குறைத்து அதன் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, Net Plus திட்டத்தின் கீழ் புதிய கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவும் வீடுகளுக்கு, மின்கல சேமிப்புத் திறனின் ஒவ்வொரு kWh-க்கும் ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.
எனினும், அதிகபட்சமாக 10 kWh சேமிப்புத் திறனுக்கே இந்த மானியம் வழங்கப்படும். இதற்காக 3,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், சூரிய மின்சக்தி சேமிப்புக்காக இறக்குமதி செய்யப்படும் மின்கலங்களுக்கு விதிக்கப்படும் 10 சதவீத துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டை (PAL) நீக்குவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
இதன் மூலம், நேரடி மானியத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு kWh-க்கும் சுமார் 4,000 முதல் 5,000 ரூபா வரையான வரிச் சலுகையும் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நேரடி மானியத்துடன், வரி நீக்கத்தின் ஊடான மேலதிக நன்மையும் கிடைக்கவுள்ளது.
நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கில், வீடுகளில் மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதை ஊக்குவிப்பதே இந்த நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.