Updated : ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் மோதி விபத்து – 5 பேர் உயிரிழப்பு, 76 பேர் காயம்; மேலதிக விபரங்கள் வெளியீடு
அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், 76 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இன்று (நவம்பர் 10) காலை, மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 பிரதான வீதியில், ரம்பேவ வெலிஓயா சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஜனகபுரவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளன.
இதன்போது, கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் பின்னால், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதில் மூன்று பேருந்துகளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் உயிரிழந்த ஐவரில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த ஏனைய நான்கு பேரும் பேருந்துப் பயணிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 47 மற்றும் 56 வயதுடைய இரு ஆண்களும், 32 மற்றும் 72 வயதுடைய இரு பெண்களும் அடங்குகின்றனர்.
உயிரிழந்தவர்கள் எட்டவீரகொல்லேவ, ரிதிகம, பதவிய மற்றும் வேயங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களில் 44 ஆண்கள், 14 பெண்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் என மொத்தம் 61 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அடங்கலாக 12 பேர் மதவாச்சி வைத்தியசாலையிலும், மூன்று பெண்கள் மிஹிந்தலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.