ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற அரசாங்கம் அர்ப்பணிப்பு – அமைச்சர்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை நோக்கி ஏற்கனவே சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வரும் நிலையில், தேசிய விமான சேவையை நட்டமின்றி இயங்கக்கூடிய நிலைக்குக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒதுக்கப்படவுள்ள நிதியின் சரியான விபரங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட இடைக்கால நிதி நிலைமை அறிக்கையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்ந்தும் பாரிய நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின்படி, 2026/27 நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய 35.6 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலப்பகுதியில் 12 பில்லியன் ரூபா நிகர நட்டம் பதிவாகியிருந்தது.
இக்காலப்பகுதியில் நிறுவனத்தின் வருமானம் 62.6 பில்லியன் ரூபாவிலிருந்து 82.8 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. எனினும், செலவினங்கள் 40.4 சதவீதத்தால் அதிகரித்து 95.2 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளன.
குறிப்பாக, விமான எரிபொருள் செலவு 93 சதவீதத்தால் அதிகரித்து 41.2 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்த மோதல் நிலைமை காரணமாக அந்தப் பிராந்தியத்திற்கான பல விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டமையும் நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பாதித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 3.4 பில்லியன் ரூபா நிகர வருமானத்தையும் கணக்கில் கொண்ட பின்னர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குழுமத்தின் மொத்த நிகர நட்டம் 32.2 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
அதிக எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள், அந்நியச் செலாவணி இழப்புகள், நிதிச் செலவுகள் மற்றும் பெருமளவிலான கடன் சுமை உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான நிதி மற்றும் பணப்புழக்கப் பிரச்சினைகளை நிறுவனம் தொடர்ந்து எதிர்கொண்டு வருவதாக நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
2026 ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாவாக இருந்துள்ளதுடன், சொத்துக்களின் பெறுமதி 209.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டுள்ளது. இதனால் 351.5 பில்லியன் ரூபா எதிர்மறை மூலதன நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நிறுவனத்தின் குறிப்பிட்ட கடன் தவணைகளைச் செலுத்துவதற்காக அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கியுள்ளதுடன், குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் விடுவித்துள்ளது.
மேலும், நிறுவனத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, அதன் நிதி நிலைத்தன்மை மற்றும் வணிக ரீதியான செயல்திறனை வலுப்படுத்தும் நோக்கில் மூலோபாய மற்றும் மறுசீரமைப்புக் குழுவொன்றை அமைப்பதற்கு 2026 ஜூன் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதேவேளை, நீண்டகால அடிப்படையில் அரசாங்கத்தின் நிதிச் சுமையைக் குறைப்பதும் இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.