ரம்பேவ பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதி – அரசாங்கம் நடவடிக்கை
அநுராதபுரம் மாவட்டத்தின் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டச் செயலகத்தின் ஊடாக இந்த வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விபத்தில் மொத்தம் 76 பேர் காயமடைந்து அப்பகுதியிலுள்ள பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களில் 61 பேர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு எலும்பியல் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தலையில் காயமடைந்த சிலர் தொடர்ந்தும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், மூவருக்கு MRI பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமைச்சருக்கு கிடைத்திருந்த இறுதித் தகவல்களின்படி, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறவில்லை என்பதுடன், உயிரிழப்புகளும் பதிவாகவில்லை.
அத்துடன், காயமடைந்த எவரையும் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 25 பேர் மெதவச்சி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 10 பேர் பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரம்பேவ வைத்தியசாலையில் ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டவர்களும் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் பலர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால், அவர்களைப் பார்வையிடுவதற்காக வருகை தரும் உறவினர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தங்குமிட வசதிகள் தொடர்பில் உதவி தேவைப்படும் உறவினர்கள் பின்வரும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அநுராதபுரம் மாவட்டச் செயலாளர்: 071 435 2016
- அமைச்சின் செயலாளர்: 071 294 8050
காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மற்றும் மெதவச்சி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், இன்று காலை மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரம்பேவ – வெலிஓயா சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து ரம்பேவ நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது எதிர்த் திசையில் வந்த மற்றுமொரு இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துடன் குறித்த பேருந்து நேருக்கு நேர் மோதியதுடன், முந்திச் செல்ல முற்பட்ட தனியார் பேருந்தும் விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 76 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.