ரூ.14.8 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டு: நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சாரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 14.8 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி, தனது தனிப்பட்ட இல்லத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக, தனியார் நிறுவனமொன்றுக்கு சுமார் 5.8 மில்லியன் ரூபாய் செலுத்துவதற்கு நீர் வழங்கல் சபையின் நிதியைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டரீதியாக அவ்வாறான பாதுகாப்புச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள அவருக்கு உரிமை இல்லாத நிலையில், இந்தக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இரண்டு சாரதிகளைப் பணியில் அமர்த்தி, அவர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக நீர் வழங்கல் சபையினால் முன்னெடுக்கப்பட்ட நீர் வழங்கல் திட்ட ஒப்பந்தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் 9 மில்லியன் ரூபாயைச் செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கத்திற்கு சுமார் 14.8 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் முன்னாள் தலைவர் சட்டவிரோதமான தனிப்பட்ட அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் நிஷாந்த ரணதுங்க கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 75,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
மேலும், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: இவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளாகும்.