ஆறு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்: அம்பர் எச்சரிக்கை விடுப்பு
நாட்டின் ஆறு மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாயம் தொடர்பான இரண்டாம் நிலை (Level 2) அம்பர் எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (நவம்பர் 10) மாலை 4 மணி முதல் நாளை (நவம்பர் 11) மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை, காலி மாவட்டத்தின் நாகொட, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல, நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டாஹின்ன மற்றும் அம்பகமுவ கோரளை, இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகேபொல, அயகம, எஹெலியகொட மற்றும் எலபாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் நிலை (Level 1) மஞ்சள் நிற மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் அல்லது மின்கம்பங்கள் சாய்வடைதல், திடீரென சேற்றுடன் கூடிய நீரோட்டம் உருவாகுதல் போன்ற மண்சரிவுக்கு முன்னரான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகக் கனமழை பெய்யும் பட்சத்தில், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.