22 ஆம் திருத்தம்: தவறான செய்தி வெளியீடு; ஊடகங்கள் திருத்தம் செய்ய வேண்டும் - பிமல் ரத்நாயக்க
22 ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக, அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தாம் ஒப்புக்கொண்டதாக வெளியான செய்திகளை உடனடியாகத் திருத்துமாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சில ஊடக நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது தமது கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பிளவையே தாம் குறிப்பிட்டாரே தவிர, அரசாங்கத்திற்குள் இருக்கும் பிளவை அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.
"ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் இதுவரை சமூகத்தை இரண்டாகப் பிளவுபடுத்திச் செயற்படவில்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருந்தேன். இந்த விவகாரம் சமூகத்தில் ஒருவித பிளவை உருவாக்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தமது உரையின் ஒரு பகுதியை மட்டும் முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்குள் பிளவுகள் இருப்பதை தாம் ஒப்புக்கொண்டது போன்றதொரு பொய் பிம்பத்தை உருவாக்க சில ஊடகங்கள் முயன்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
எனவே, சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் குறித்த செய்திகளை உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புரிமைப் பிரச்சினையாக முன்னெடுக்கப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.
மேலும், இந்த அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சமூகத்தில் எழுந்துள்ள விவாதம், இந்த நடைமுறையைச் சரியாகக் கையாளுவதை உறுதி செய்யும் பொறுப்பை அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.