நீதிமன்ற அலுவலருக்கு லஞ்சம் வழங்க முயற்சி: முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி விளக்கமறியலில்!
கொழும்பு மேல் நீதிமன்ற அலுவலர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் வழங்க முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி லக்மந்தி ஹெட்டியாரச்சி அக்டோபர் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிவான், இந்த உத்தரவை வழங்கினார்.
பல ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், தனது கணவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையாக மாற்றி அமைப்பதற்குத் தேவையான தலையீடுகளை மேற்கொள்ளும் நோக்கில், மேல் நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க முயன்றதாகவே லக்மந்தி ஹெட்டியாரச்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.