2041 இல் இலங்கையின் முதியோர் மக்கள்தொகை 24 சதவீதத்தை தாண்டும்: நாடாளுமன்றத்தில் தகவல்
இலங்கையில் முதியோர்களின் மக்கள்தொகை 2041 ஆம் ஆண்டளவில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 24 சதவீதத்தையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வேகமாக அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகையினால் எழுந்துள்ள சவால்கள் குறித்துத் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.
மக்கள்தொகை மாற்றத்தினால் ஏற்படும் சவால்களை அரசாங்கம் ஏற்கனவே அடையாளம்கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டு மக்கள்தொகை அறிக்கையின்படி, இலங்கையில் தற்போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 3.9 மில்லியன் (39 லட்சம்) மக்கள் வாழ்கின்றனர். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 18.2 சதவீதமாகும் (18.2%).
நாட்டின் முதியோர் மக்கள்தொகையில் 58.33 சதவீதம் பேர் பெண்களாகவும், 43.67 சதவீதம் பேர் ஆண்களாகவும் காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள்தொகைப் போக்குகள் குறித்துக் குறிப்பிட்ட பன்னிலகே, 1981 ஆம் ஆண்டில் முதியோர்களின் சதவீதம் சுமார் 6 சதவீதமாக மாத்திரமே காணப்பட்டதாகவும், எனினும் அதற்குப் பிந்தைய தரவுகள் முதியோர் மக்கள்தொகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
நிபுணர்களின் கணிப்புகளின்படி இந்த நிலைமை தொடர்ந்து நீடிக்கும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், 2041 ஆம் ஆண்டளவில் இலங்கையர்களில் நால்வரில் ஒருவர் முதியோர் வயதை நெருங்குவர் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 24 சதவீதத்தைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
வேகமாக வயதாகி வரும் மக்கள்தொகைக்குத் தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதியோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலங்களை உருவாக்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.