2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: தனிநபர் வருமான வரியில் மேலும் சலுகைகள்
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரியை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதன்படி, வரியற்ற வருமான எல்லையை அதிகரிப்பதுடன், வருமான வரி அறவிடப்படும் படிநிலைகளிலும் திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்களின் மூலம் தனிநபர் வரி செலுத்துவோருக்கு மாதாந்தம் 750 ரூபா முதல் அதிகபட்சமாக 15,750 ரூபா வரை மேலதிக வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரைக்கு அமைய, தனிநபர்களுக்கான வருடாந்த வரியற்ற வருமான எல்லையை 18 இலட்சம் ரூபாவிலிருந்து 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, மாதாந்த வரியற்ற வருமான எல்லை 150,000 ரூபாவிலிருந்து 162,500 ரூபாவாக உயர்த்தப்படவுள்ளது. இதனால், மாதாந்தம் 162,500 ரூபா வரை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெறுவோர் தமது சம்பள வருமானத்துக்கு தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது.
அத்துடன், தற்போதுள்ள படிப்படியான வருமான வரி முறையிலும் திருத்தங்களை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, ஆரம்ப 6 சதவீத வரி வீதத்தைத் தொடர்ந்து தற்போது நடைமுறையிலுள்ள 18 சதவீத வரி வீதத்துக்குப் பதிலாக 12 சதவீத வரி வீதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
புதிய முன்மொழிவின்படி, வருடாந்த வரிக்கு உட்பட்ட வருமானத்தின் முதல் 850,000 ரூபாவுக்கு 6 சதவீத வரியும், அடுத்த 600,000 ரூபாவுக்கு 12 சதவீத வரியும் அறவிடப்படும்.
அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு 600,000 ரூபா வருமானப் பிரிவுகளுக்கும் முறையே 18, 24 மற்றும் 30 சதவீத வரி அறவிடப்படுவதுடன், அதற்கு மேலான வருமானத்துக்கு அதிகபட்சமாக 36 சதவீத வரி அறவிடப்படும்.
மேலும், அதிகபட்சமான 36 சதவீத தனிநபர் வருமான வரி நடைமுறைக்கு வரும் மாதாந்த வருமான எல்லையும் சுமார் 358,000 ரூபாவிலிருந்து 433,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த புதிய வரித் திருத்தங்களின் மூலம் வருமானத்தின் அடிப்படையில் தனிநபர் வரி செலுத்துவோருக்கு மாதாந்தம் 750 ரூபா முதல் 15,750 ரூபா வரையான மேலதிக நிவாரணம் கிடைக்கும் என வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டில் வருடாந்த வரியற்ற வருமான எல்லையை 12 இலட்சம் ரூபாவிலிருந்து 18 இலட்சம் ரூபாவாக அரசாங்கம் அதிகரித்திருந்தது. இதன் மூலம் மாதாந்தம் 3,500 ரூபா முதல் 20,500 ரூபா வரையான வரிச் சலுகை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சலுகைகளுடன் 2027ஆம் ஆண்டுக்கான புதிய வரித் திருத்தங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, தனிநபர்களுக்கான மொத்த மாதாந்த வரிச் சலுகை 4,250 ரூபா முதல் 36,250 ரூபா வரை அமையும் என வரவு செலவுத் திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரிச் சட்டம் இலக்கம் 24, 2017இல் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் இந்த வரித் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.