ருவன்வெலிசாய பகுதியில் ஏற்பட்ட மோதல் – நான்கு பிக்குகள் உட்பட 8 பேர் பொலிஸ் காவலில்
அநுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் இன்று (நவம்பர் 12) ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பில் நான்கு பிக்குகள் உட்பட எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பிக்குகள், ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவன்வெலிசாய தூபியின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே அமைந்துள்ள வாகனத் தரிப்பிடத்தில், வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், வணக்கத்திற்குரிய ராஜாங்கனயே சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையிலான மற்றொரு குழுவினர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் ராஜாங்கனயே சத்தாதிஸ்ஸ தேரர் தலையில் காயமடைந்துள்ளதுடன், அவர் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.