2027 ஹஜ் பயணம்: இலங்கைக்கு 3,500 இடங்கள் ஒதுக்கீடு
2027ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் பங்கேற்க இலங்கைக்கு 3,500 யாத்திரிகர்களுக்கான இடங்களை சவூதி அரேபியா ஒதுக்கியுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஹஜ் ஒப்பந்தம் கடந்த நவம்பர் 9ஆம் திகதி திங்கட்கிழமை, ஜித்தாவில் நடைபெற்ற வருடாந்த ஹஜ் கண்காட்சி மற்றும் மாநாட்டை முன்னிட்டு கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் மற்றும் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் டொக்டர் அப்துல் பத்தாஹ் பின் சுலைமான் மஷாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, ஹஜ் யாத்திரிகர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் யாத்திரை நடவடிக்கைகளை மேலும் இலகுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கைத் தரப்பினர் தெரிவித்தனர்.
அத்துடன், 2027ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட நடைமுறைச் செயற்பாடுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, இலங்கைப் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகாரங்களுக்கான அமைச்சர் டொக்டர் தவ்பீக் ஃபவ்ஸான் அல் ரபியாவையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தக் குழுவில் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கை ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார், ஜித்தாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் நீதியரசர் எம்.டி. மொஹமட் லஃபார், ஹஜ் மற்றும் உம்ரா குழு உறுப்பினர் ருஷ்டி காலித் உள்ளிட்ட தூதரக அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட கூட்டுக் குழுவினரும் சவூதி அரேபியாவின் ஹஜ் அமைச்சினால் நடத்தப்பட்ட விசேட பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றனர்.
ஹஜ் யாத்திரை தொடர்பான சேவைகளின் தரத்தையும் செயற்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் இந்தப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.