2025/26 நிதியாண்டில் இலங்கையின் முன்னணி 100 நிறுவனங்களின் வருவாய் 20% அதிகரிப்பு
இலங்கையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி 100 நிறுவனங்களின் மொத்த வருவாய், 2025/26 நிதியாண்டில் சுமார் 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக முன்னணி வர்த்தக சஞ்சிகையான LMD தெரிவித்துள்ளது.
LMD சஞ்சிகையை வெளியிடும் Media Services நிறுவனம், 33ஆவது பதிப்பாக வெளியாகவுள்ள LMD 100 தரவரிசையில் முதல் 20 இடங்களைப் பெற்ற நிறுவனங்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஹேலீஸ் (Hayleys), ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings – JKH) மற்றும் LOLC ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
ஹேலீஸ் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. இந்நிறுவனம் 585 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான ஒருங்கிணைந்த வருவாயைப் பதிவு செய்துள்ளதுடன், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீத அதிகரிப்பாகும்.
ஐந்தாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், சுமார் 529 பில்லியன் ரூபாய் வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 67 சதவீத அதிகரிப்பாகும்.
LOLC ஹோல்டிங்ஸ் நிறுவனம் 429 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாயைப் பதிவு செய்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் 26 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, ஏழாவது இடத்திலிருந்த கொமர்ஷல் வங்கி (Commercial Bank of Ceylon) நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கார்சன் கம்பர்பெட்ச் (Carson Cumberbatch) நிறுவனம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
புகிட் டாரா (Bukit Darah) ஆறாவது இடத்தையும், ஹட்டன் நேஷனல் வங்கி (Hatton National Bank) ஏழாவது இடத்தையும் பெற்றுள்ளன. லங்கா ஐஓசி (Lanka IOC), சிடி ஹோல்டிங்ஸ் (CT Holdings) மற்றும் கார்கில்ஸ் (சிலோன்) (Cargills (Ceylon)) ஆகிய நிறுவனங்கள் முறையே எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களைப் பிடித்துள்ளன.
இலங்கை பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வரும் சூழலில், முன்னணி நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளமை அவற்றின் செயல்திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக LMD சுட்டிக்காட்டியுள்ளது.
2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சுமார் 5 சதவீதமாகப் பதிவானதுடன், 2025/26 நிதியாண்டின் பிற்பகுதியில் பணவீக்கமும் சுமார் 5 சதவீதமாகக் காணப்பட்டது. இத்தகைய பொருளாதாரப் பின்னணியில், முன்னணி நிறுவனங்களின் மொத்த வருவாயில் ஏற்பட்டுள்ள 20 சதவீத அதிகரிப்பு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
எனினும், நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பை மாத்திரம் பொருளாதார மீட்சியின் முழுமையான அளவுகோலாகக் கருத முடியாது என Media Services எச்சரித்துள்ளது. நிறுவனங்களுக்கு இடையே இலாபத்தன்மையில் வேறுபாடுகள் காணப்படுவதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார அபாயங்களும் தொடர்ந்து நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெளியாகவுள்ள LMD 100 வருடாந்தப் பதிப்பில் முழுமையான நிறுவனத் தரவரிசைகளும், முன்னணி நிறுவனங்கள் தொடர்பான விரிவான விபரங்களும் இடம்பெறவுள்ளன.
LMD 100 தரவரிசையில் முதல் 20 இடங்களைப் பெற்ற நிறுவனங்கள்:
1. Hayleys
2. John Keells Holdings
3. LOLC Holdings
4. Commercial Bank of Ceylon
5. Carson Cumberbatch
6. Bukit Darah
7. Hatton National Bank
8. Lanka IOC
9. CT Holdings
10. Cargills (Ceylon)
11. Sampath Bank
12. Ceylon Cold Stores
13. Dialog Axiata
14. Melstacorp
15. Brown and Company
16. Vallibel One
17. Ceylon Beverage Holdings
18. Lion Brewery (Ceylon)
19. Singer (Sri Lanka)
20. Hemas Holdings