சட்டவிரோத இரண்டாவது திருமணமும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாகக் கருதப்படலாம் – முன்னிலை சோசலிசக் கட்சி எச்சரிக்கை
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், சட்டவிரோதமான இரண்டாவது திருமணம் உள்ளிட்ட குற்றங்களும் கடுமையான குற்றங்களாகக் கருதப்படக்கூடும் என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காகக் கொண்டுவரப்படும் சட்டத்தில், சட்டவிரோத இரண்டாவது திருமணம், பதிப்புரிமை மீறல், உரிமமின்றி சூதாட்டத்தில் ஈடுபடுதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் ஏன் உள்ளடக்கப்பட்டுள்ளன எனக் கேள்வி எழுப்பினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தொடர்பான விரிவான வரைவிலக்கணம் காரணமாக, சாதாரண குற்றங்களுடன் தொடர்புடையவர்கள்கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களாகக் கருதப்பட்டு கடுமையான சட்ட விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின்படி, நிதி அல்லது ஏனைய பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், குறிப்பிட்ட குற்றங்களை ஒன்றிணைந்து செய்வதற்காகச் செயற்படும் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட கட்டமைக்கப்பட்ட குழு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவாக வரையறுக்கப்படுவதாக புபுது ஜயகொட தெரிவித்தார்.
மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆடை அணியும் முறை, சிகை அலங்காரம், கைகளின் சைகைகள், மொழிப் பயன்பாடு மற்றும் பச்சை குத்தல்கள் போன்ற அம்சங்களையும் ஒருவரின் குற்றக் குழுத் தொடர்பை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்துவது குறித்துக் கவலை வெளியிட்டார்.
“இலங்கையில் பச்சை குத்திக்கொள்வது குற்றமா?” எனக் கேள்வி எழுப்பிய அவர், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே பச்சை குத்திக்கொண்டவர்களின் நிலை என்னவாகும் என்றும் வினவினார்.
காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பது தொடர்பான சட்ட ஏற்பாடுகளும் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என அவர் எச்சரித்தார். குறிப்பாக, போராட்டங்களில் ஈடுபடுவோர் அல்லது காவல்துறையினரின் முறைகேடான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தலையிடும் பொதுமக்கள் இத்தகைய சட்ட ஏற்பாடுகளின் கீழ் பாதிக்கப்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.
ஒருவரின் சிகை அலங்காரம் அல்லது பச்சை குத்தல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவரைக் குற்றக் குழுவொன்றின் உறுப்பினராக அடையாளப்படுத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்த அவர், இச்சட்டத்தின் ஏற்பாடுகள் விரிவாக ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதே இச்சட்டத்தின் நோக்கம் எனக் கூறப்பட்டாலும், அதன் ஏற்பாடுகள் அந்த நோக்கத்தைத் தாண்டி சாதாரண மக்களையும் பாதிக்கக்கூடும் எனவும் புபுது ஜயகொட எச்சரித்தார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஒக்டோபர் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதுடன், சர்வதேசக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதும் இச்சட்டமூலத்தின் நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.