100 புதிய சுவசெரிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்ய இந்தியா ரூ.1.72 பில்லியன் நிதியுதவி – ஹர்ஷ டி சில்வா மகிழ்ச்சி
இலங்கையின் 1990 சுவசெரிய இலவச அவசர அம்புலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு இந்திய அரசாங்கம் ரூ.1.72 பில்லியன் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளமைக்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், தனது பிள்ளையின் வெற்றியைக் காணும் தந்தையின் மனநிலையைப் போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவசெரிய அம்புலன்ஸ் சேவை தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்பதே தனது ஒரே விருப்பம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு பங்களித்த இந்திய அரசாங்கத்திற்கும், ஏனைய அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவசர மருத்துவ உதவிகளை மக்களுக்கு வழங்குவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவையின் பணியாளர்களுக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
சாதாரண இலங்கை மக்களுக்கு இந்தச் சேவை ஆற்றிவரும் அளப்பரிய பங்களிப்பு குறித்து விரிவாகக் கூற வேண்டிய அவசியமில்லை எனவும், அதன் முக்கியத்துவம் ஏற்கனவே அனைவராலும் நன்கு அறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், 100 புதிய அம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்காக சுமார் ரூ.1.72 பில்லியன் நிதியுதவி வழங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், கடந்த புதன்கிழமை (11) இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
2015ஆம் ஆண்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராகப் பதவி வகித்தபோது, நவீன அவசர மருத்துவ சேவையொன்றை உருவாக்கும் யோசனையை முன்வைத்ததன் மூலம், 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை நிறுவுவதில் ஹர்ஷ டி சில்வா முக்கிய பங்காற்றியிருந்தார்.
இந்தியாவின் 7.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆரம்ப நிதியுதவியுடன், 88 அம்புலன்ஸ்கள் மற்றும் அவசர அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் மத்திய நிலையம் ஆகியவற்றைக் கொண்டு, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
பின்னர், இந்தியா வழங்கிய மேலதிகமாக 15.02 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் நாடு முழுவதும் இச்சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்டன.
தற்போது, 1990 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொதுமக்கள் இலவசமாக அணுகக்கூடிய வகையில், 24 மணி நேரமும் சுவசெரிய அம்புலன்ஸ் சேவை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.