வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: தலைமறைவான நபரின் சொத்துக்களை முடக்க நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த குறித்த நபர், வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகப் பலரிடம் கூறி பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர். இதையடுத்து, குறித்த நபர் தனது வசிப்பிடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
அவருக்கு எதிராக கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரையில் அவர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை.
இந்த நிலையில், தலைமறைவாகியுள்ள குறித்த நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.