வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நடைமுறைக்குத் தடை – நியூயோர்க்

arvloshan.com

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி ஒரே பொருள் அல்லது சேவைக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் நிறுவனங்களின் நடைமுறைக்கு நியூயோர்க் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர மேயர் ஸொஹ்ரான் மம்தானி (Zohran Mamdani) இந்தத் தடையை அறிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் இணைய உலாவல் வரலாறு உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விலைகளை நிறுவனங்கள் நிர்ணயிக்கும் நடைமுறையே 'கண்காணிப்பு அடிப்படையிலான விலை நிர்ணயம்' (Surveillance Pricing) என அழைக்கப்படுகிறது.

இவ்வாறான நடைமுறையை நியூயோர்க் நகரில் தடை செய்துள்ளதாக மேயர் மம்தானி தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலைகளை வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியூயோர்க் நகர சபை கடந்த வியாழக்கிழமை (12) இந்தத் தடையை உள்ளடக்கிய சட்டமூலத்திற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து மேயரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகர சபையின் தலைவர் ஜூலி மெனின் (Julie Menin) முன்மொழிந்த இந்தச் சட்டமூலம், அமெரிக்காவில் இத்தகைய விலை நிர்ணய நடைமுறைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள வலுவான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இதன்படி, நுகர்வோரின் தனிப்பட்ட தரவுகளை முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ பயன்படுத்தும் அல்கோரிதம்கள் மூலம் ஒரே பொருள் அல்லது சேவைக்கு வெவ்வேறு வாடிக்கையாளர்களிடம் வெவ்வேறு விலைகளை அறவிடும் நடைமுறைக்கு நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும்.

இந்தச் சட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நகர சபைத் தலைவர் ஜூலி மெனின், நிறுவனங்கள் அல்கோரிதம்கள் மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி ஒரே பொருளுக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயிப்பது நெறிமுறையற்ற செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய நடைமுறைகள் ஏற்கனவே அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுப் பிரச்சினையை மேலும் மோசமாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலை நிர்ணய நடைமுறைகள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமல் இடம்பெறுவதால், அவற்றைக் கண்டறிவது கடினமாக இருப்பதாகவும் நகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளில், பிரபலமான மளிகைப் பொருட்கள் விநியோகத் தளமொன்று மேற்கொண்ட அல்கோரிதம் அடிப்படையிலான விலைப் பரிசோதனைகளால், தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடையில் ஒரே பொருளின் விலையில் 23 சதவீதம் வரை வித்தியாசம் ஏற்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று, மற்றுமொரு விசாரணையில், வாடிக்கையாளர் ஒருவர் விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்குள் நுழைந்த பின்னர், அங்கு விற்பனை செய்யப்பட்ட தொலைக்காட்சியொன்றின் விலை 499.99 டொலரிலிருந்து 599.99 டொலராக அதிகரிக்கப்பட்ட சம்பவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பிரபலமான வாடகை வாகனச் சேவை நிறுவனமொன்றின் முன்னாள் நடத்தைப் பொருளாதார நிபுணர் வெளியிட்ட தகவலின்படி, வாடிக்கையாளரின் கையடக்கத் தொலைபேசியின் மின்கலச் சக்தி குறைவாக இருக்கும்போது, அவசரமாகப் போக்குவரத்துச் சேவை தேவைப்படும் சூழலைப் பயன்படுத்தி அதன் செயலி கட்டணத்தை அதிகரித்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான முறைகேடுகளைத் தடுப்பதுடன், விலை நிர்ணயத்தில் நுகர்வோரின் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதுமே புதிய சட்டத்தின் பிரதான நோக்கம் என நியூயோர்க் நகர சபை தெரிவித்துள்ளது.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்

...

arvoshan.com

டைட்டானிக்கை விட நீளமான கப்பல் கடலில் மூழ்கடிப்பு! உலகின் மிகப்பெரிய செயற்கைப் பவளப்பாறையாக மாற்றம்

...

arvoshan.com

புரூக்ளின் கட்டட இடிபாடு: உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

...

arvoshan.com

கல்விச் சான்றிதழ் சர்ச்சை: இந்தோனேசிய துணை ஜனாதிபதி பதவி விலகல்

...

arvoshan.com

கொங்கோவில் தீவிரமடையும் எபோலா பரவல்: 11 ஆயிரத்தைக் கடந்த தொற்றாளர்கள்; 5,387 பேர் உயிரிழப்பு

...

arvoshan.com

ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு இணக்கம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் இல்லை

...

arvoshan.com

பாகிஸ்தான் பெண் ஊடகவியலாளர் வீட்டில் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்ததாக ஒப்புதல்!

...

arvoshan.com

ஈரானுடனான போர் இராணுவ ரீதியாக முடிவுக்கு வந்துவிட்டது – டொனால்ட் ட்ரம்ப்

...

arvoshan.com

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் – ட்ரம்ப் அறிவிப்பு

...

arvoshan.com

பிரான்ஸ் பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் சாதனங்கள் மீது சைபர் தாக்குதல் – ஈரான் மீது குற்றச்சாட்டு!

...

arvoshan.com

பராகுவே ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் விசாரணை; பதவி நீக்க நடவடிக்கையும் ஆரம்பம்!

...

arvoshan.com

வங்கி நெருக்கடியால் ஜனாதிபதி பதவி விலகல் – பராகுவேயில் அரசியல் நெருக்கடி!

...

arvoshan.com

பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்க்க மறுத்த இத்தாலிய சமையல் கலைஞர் அவுஸ்திரேலியாவில் பணிநீக்கம்!

...

arvoshan.com

ஜோர்டானில் இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே பயங்கரவாதத் தாக்குதல் – பாதுகாப்பு அதிகாரி பலி!

...

arvoshan.com

பிரான்ஸில் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: மக்ரோன் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

...