வரவு செலவுத் திட்டம் 2027: அரச சேவையில் மேலும் 1,10,000 பேரை நியமிக்க அரசாங்கம் திட்டம்
இலங்கையின் அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதுடன், அரச நிறுவனங்களின் செயற்திறனை மேம்படுத்தும் நோக்கில் மேலும் சுமார் 1,10,000 ஊழியர்களை புதிதாக இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரச துறையில் நிலவும் 1,48,940 வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அரச துறையின் ஆட்சேர்ப்புத் தேவைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பணியாளர் முகாமைத்துவ அதிகாரிகள் குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக இந்த அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அனுமதி வழங்கப்பட்ட வெற்றிடங்களில் சுமார் 40,000 பணியிடங்களுக்கான நியமனங்கள் ஏற்கனவே நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், எஞ்சிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரச நிறுவனங்களில் போதிய மனித வளத்தை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் மேலும் 1,10,000 ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரச நிறுவனங்களின் சேவைகளை வினைத்திறனுடனும் தரமான முறையிலும் முன்னெடுக்கத் தேவையான மனித வளத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அத்துடன், திணைக்கள சேவைகள் மற்றும் ஏனைய நிறைவேற்றுச் சேவைகளில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அவற்றின் பதவி உயர்வு நடைமுறைகளை தீவு தழுவிய சேவைகளில் தற்போது நடைமுறையில் உள்ள முறைகளுக்கு இணையாக மாற்றியமைக்கவும் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தி நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.