வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் – கடும் காற்று, கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இந்த வார இறுதியில் புதிய தாழமுக்கப் பிரதேசம் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தின் அறிவிப்பின்படி, எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி குறித்த கடற்பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் உருவாகக்கூடும்.
இதனைத் தொடர்ந்து, அது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வலுவான தாழமுக்கப் பிரதேசமாக உருவெடுக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் தாக்கமாக நவம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அந்தமான் கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் ஆழ்கடலில் பயணிக்கும் பலநாள் மீன்பிடிப் படகுகள் உள்ளிட்ட மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் செயற்படுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த எச்சரிக்கை இன்று (10) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.