ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன், எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜை கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ரூ.454 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜையொருவர் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொறியியலாளரான குறித்த சந்தேகநபர், கடந்த புதன்கிழமை (28) இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாரிஸிலிருந்து கட்டார் ஊடாக, கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் QR 654 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்த சந்தேகநபரை, மேலதிக சோதனைகளுக்காக சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபரின் பயணப் பொதிகளைச் சோதனையிட்ட அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவை கொக்கெய்ன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 5,121 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் வீதிப் பெறுமதி சுமார் 256 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சுமார் 23,000 மாத்திரைகளுக்குச் சமமான 13,173 கிராம் எக்ஸ்டசி போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 198 மில்லியன் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இரண்டு வகையான போதைப்பொருட்களின் மொத்த வீதிப் பெறுமதி சுமார் 454 மில்லியன் ரூபாய் என இலங்கை சுங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.