லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
முன்னாள் நீதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகள் மற்றும் சொகுசு வாகனங்களை முடக்குவதற்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை கையாள்வது தொடர்பான 2025ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரகித ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றவாளி ஒருவருக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, குறித்த குற்றவாளியின் மனைவியிடம் இருந்து 120 மில்லியன் ரூபாய் இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறித்த இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஏற்கனவே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தகவல்களை முன்வைத்திருந்தது.
இந்த வழக்கில் ரகித ராஜபக்ஷ முதலாவது சந்தேகநபராகவும், சரித அபேசிங்க இரண்டாவது சந்தேகநபராகவும், வருண ஹந்திகே அருண சதுரங்க மூன்றாவது சந்தேகநபராகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இம்மூன்று சந்தேகநபர்களும் முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்கள் முடக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை வழங்குவதற்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று இன்று (29) நாவலையில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.