பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்!
இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை (30) நாடளாவிய ரீதியில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சருதத்த இலங்கசிங்க, நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை, தற்போதுள்ள விரிவுரையாளர்கள் மீது சுமத்தப்படும் அதிகப்படியான பணிச்சுமை, போதிய வளங்களின்மை மற்றும் போதுமான பௌதீக வசதிகள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், வேலைநிறுத்தப் போராட்டத்துடன் இணைந்து நாளை எதிர்ப்பு ஊர்வலமொன்றையும் ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதுடன், இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதுமே இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.