ரஷ்யா – உக்ரைன் இடையே மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்திற்கு இணக்கம்: போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முன்னேற்றம் இல்லை
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் மிகப்பெரிய அளவிலான போர்க்கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் தெரிவித்துள்ளனர்.
எனினும், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு முக்கிய உடன்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளன.
ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பேச்சுவார்த்தையின் நிறைவில் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகனும் அமெரிக்கப் பிரதிநிதியுமான ஜாரெட் குஷ்னர், இரு தரப்பினரும் மிகப்பெரிய மனிதாபிமான அடிப்படையிலான போர்க்கைதிகள் விடுதலைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டார். பரிமாற்றம் செய்யப்படவுள்ள கைதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யக் குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கியும், உக்ரைன் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்திய ருஸ்டெம் உமெரோவும் இந்த இணக்கத்தை உறுதிப்படுத்தினர். எனினும், இது கொள்கை ரீதியான இணக்கம் மட்டுமே என மெடின்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
புதினையும் ஸெலென்ஸ்கியையும் சந்திக்கவுள்ள அமெரிக்கப் பிரதிநிதிகள்
அமெரிக்கப் பிரதிநிதிகளான ஜாரெட் குஷ்னரும் ஸ்டீவ் விட்கோப்பும் வியாழக்கிழமை மாஸ்கோவுக்குச் சென்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்திக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக குஷ்னர் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னரான பாதுகாப்பு உத்தரவாதங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பிரதேசங்களின் எதிர்காலம் மற்றும் இறுதித் தீர்வில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு ஆகியவை பேச்சுவார்த்தைகளில் முக்கிய சவால்களாகத் தொடர்கின்றன.
ஐரோப்பிய நாடுகளின் பங்கேற்புக்கு ரஷ்யா எதிர்ப்பு
அபுதாபியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. எனினும், பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்த பின்னர் ஐரோப்பிய அரசாங்கங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளை உக்ரைன் குழுவினர் சந்திக்கவுள்ளதாக ருஸ்டெம் உமெரோவ் தெரிவித்தார்.
நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள் பங்கேற்பதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகவும் மாஸ்கோ குற்றஞ்சாட்டி வருகிறது.
இருப்பினும், எதிர்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பு ஆகியவை பங்கேற்க வேண்டியது அவசியம் என குஷ்னர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் படையெடுப்பதைத் தடுப்பதற்கான உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களைப் பெறுவதே தமது நோக்கம் என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஐரோப்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்கள் போர் நிறுத்தத்திற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நம்பிக்கையற்ற சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட குஷ்னர், அதனைப் போக்குவதற்கு இரு தரப்பினரும் புதிய முன்மொழிவுகளை முன்வைக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
தொடரும் ரஷ்ய – உக்ரைன் தாக்குதல்கள்
இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டாலும், போர்முனையில் மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
உக்ரைனின் தெற்கு ஒடேசா பிராந்தியத்தில் உள்ள சந்தையொன்றின் மீது ரஷ்யா நடத்திய பகல்நேரத் தாக்குதலில் மூவர் உயிரிழந்ததுடன், 11 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தெற்கு சப்போரிஷியா பிராந்தியம் மற்றும் கிழக்கு கார்கிவ் நகரம் மீதும் ரஷ்யா இரவு நேரத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஏழு பொதுமக்கள் காயமடைந்ததுடன், கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலடியாக உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 627 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் 150 ட்ரோன்கள் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உஸ்ட்-லுகா துறைமுகத்தில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இந்தத் துறைமுகம் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் ஒன்றாகும்.
இந்தோனேசியப் பிரஜை கைது தொடர்பில் விசாரணை
இதேவேளை, உக்ரைனில் இந்தோனேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில், அவரைச் சந்திப்பதற்கான தூதரக அனுமதியைப் பெறுவதற்கு கீவ் நகரிலுள்ள இந்தோனேசியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் யுவோன் மிவெங்காங் இதனைத் தெரிவித்துள்ளதுடன், குறித்த விவகாரத்தைத் தனது அரசாங்கம் மிகவும் தீவிரமாகக் கையாள்வதாகவும், கைது செய்யப்பட்டுள்ள தனது நாட்டுப் பிரஜையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.