ரஷ்யாவில் தொடர் குண்டுவெடிப்புகள்: இராணுவ அதிகாரி பலி; உக்ரைன் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் படுகாயம்
ரஷ்யாவில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், உக்ரைனின் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மொஸ்கோவில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில், உக்ரைனின் முன்னாள் பிரதமர் மைகோலா அசரோவின் முன்னாள் ஆலோசகரான செர்ஜி சவோரோட்னி (72) படுகாயமடைந்துள்ளார்.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவின் தகவலின்படி, அவர் பயணித்த காரில் வெடிகுண்டு வெடித்ததில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அவர் தனது இடது கையை இழந்துள்ளதாகவும், பலத்த காயங்களுடன் கோமா நிலையில் இருப்பதாகவும் ரஷ்யாவின் REN TV ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் மைகோலா அசரோவ், இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்ததுடன், உக்ரைன் அரசாங்கத்தை விமர்சித்து வந்ததன் காரணமாகவே தனது முன்னாள் ஆலோசகர் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சின் ஆட்சிக்காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தவர் மைகோலா அசரோவ். 2014ஆம் ஆண்டு போராட்டங்களைத் தொடர்ந்து யனுகோவிச் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார். அசரோவும் தற்போது ரஷ்யாவில் வசித்து வருகின்றார்.
இதற்கிடையில், வியாழக்கிழமை (12) செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இடம்பெற்ற மற்றுமொரு கார் குண்டுவெடிப்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவர் தொடர்பான விபரங்களை ரஷ்ய புலனாய்வுக் குழு வெளியிடவில்லை. எனினும், அவர் கேணல் தரத்திலான அதிகாரி என ரஷ்யாவின் Fontanka ஊடகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனிலிருந்து பலூன் மூலம் ரஷ்யாவுக்குக் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டு, குறித்த அதிகாரியின் காரில் பொருத்தப்பட்டதாகவும், உக்ரைன் உளவுத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இரு தாக்குதல்கள் தொடர்பிலும் உக்ரைன் அதிகாரிகள் இதுவரை கருத்து வெளியிடவில்லை.
உக்ரைன் போர் ஆரம்பமானதிலிருந்து ரஷ்யாவில் இராணுவ அதிகாரிகள் மற்றும் போருடன் தொடர்புடைய முக்கிய நபர்களைக் குறிவைத்து பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் கீவ் அரசாங்கம் இருப்பதாக மொஸ்கோ குற்றஞ்சாட்டி வருகிறது. அதேவேளை, ரஷ்யாவுக்குள் இடம்பெற்ற சில தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 டிசம்பரில், ரஷ்ய இராணுவத்தின் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், மொஸ்கோவில் தனது குடியிருப்புக்கு அருகே ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலைத் தாம் ஏற்பாடு செய்ததாக உக்ரைனின் பாதுகாப்புப் பிரிவு பின்னர் தெரிவித்திருந்தது.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் மொஸ்கோவின் மத்திய பகுதியில் உள்ள உயர்தர உணவகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஐவர் உயிரிழந்ததுடன், சுமார் 20 பேர் காயமடைந்தனர்.
அதே மாதம், யெகத்தரின்பேர்க் நகருக்கு அருகே ரஷ்ய ஆளில்லா விமான உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்ததுடன், அவரது சாரதி உயிரிழந்தார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் புறநகர்ப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு கார் குண்டுவெடிப்பில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அவரது மனைவி காயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் சரடோவ் பிராந்தியத்திலுள்ள ஏங்கல்ஸ் நகரில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்திருந்தார்.
ரஷ்யா - உக்ரைன் போருடன் தொடர்புடைய நபர்களைக் குறிவைத்து இடம்பெற்று வரும் இத்தகைய தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் ரஷ்யாவின் உள்பகுதிகளிலும் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதை எடுத்துக்காட்டுகின்றன.