மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரப்பினர் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) அருகில் நடமாடும் அங்கீகரிக்கப்படாத தரகர்களிடம் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2026 நவம்பர் 10ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
ஒருநாள் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இணையவழி மற்றும் தொலைபேசி ஊடாக முன்பதிவு செய்யும் வசதிகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வாகன உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களை நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் மாத்திரமன்றி, மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ நடைமுறைகளைப் பின்பற்றாமல் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்கள், திணைக்களத்திற்கு வெளியே நடமாடும் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, பொதுமக்கள் உத்தியோகபூர்வ நடைமுறைகளை மாத்திரம் பின்பற்றுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் மட்டுமே தங்களது தேவைகள் தொடர்பில் அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், தரகர்களுடன் எவ்வித பணப் பரிமாற்றங்களிலும் ஈடுபட வேண்டாம் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பணம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.