மெத் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு: பிஜியில் தேசிய HIV அவசரநிலை பிரகடனம்!
பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பிஜியில் (Fiji) எச்.ஐ.வி (HIV) தொற்றாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு தேசிய சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் மெத்தாம்பெட்டமைன் எனும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலேயே இந்நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள பிஜியின் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகள் அமைச்சர் கலாநிதி ரத்து அடோனியோ லாலாபாலவு , நாட்டில் நிலவும் எச்.ஐ.வி பரவலானது தற்போது 'பெருந்தொற்று' (Epidemic) நிலையை எட்டியுள்ளதாகவும், சாதாரண தடுப்பு நடவடிக்கைகள் இதற்கு போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் இந்த பாரதூரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிஜியில் தற்போது 60 வளர்ந்த நபர்களில் ஒருவர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலைமை 167 பேருக்கு ஒருவர் என்ற அளவிலேயே காணப்பட்டது. அத்துடன், கர்ப்பிணிப் பெண்களில் 50 பேரில் ஒருவர் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து இந்த அவசரநிலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள, 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட பிஜி நாட்டில், எச்.ஐ.வி பரவல் உலகின் மிக வேகமான அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. 2010 ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 மடங்காக அதிகரித்துள்ளது.
பிஜி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பாதையில் அமைந்திருப்பதும், உள்ளூர் அளவில் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதும் இந்நிலைக்கு முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் ஊசிகளைப் பகிர்ந்துகொள்வது, சுத்தமான ஊசிகள் கிடைக்காத நிலை, குறைந்த சுகாதார விழிப்புணர்வு, சமூகப் புறக்கணிப்பு பயம் மற்றும் முறையான பரிசோதனை வசதிகள் இல்லாமை ஆகியவை இந்நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் அமைப்பின் தரவுகளின்படி, பிஜியில் பதிவான எச்.ஐ.வி வழக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பாலியல் தொடர்புகள் மூலமாகவும், 42 சதவீதத்திற்கும் அதிகமானவை போதைப்பொருள் செலுத்தப் பயன்படுத்தப்படும் ஊசிகள் மூலமாகவும் பரவியுள்ளன. அங்குள்ள கணிப்புகளின்படி, எச்.ஐ.வி தொற்றாளர்களில் 39 சதவீதமானோர் மட்டுமே தமக்கு தொற்று இருப்பதை அறிந்துள்ளனர். மேலும் 22 சதவீதமானோர் மட்டுமே அதற்கான வைரஸ் எதிர்ப்பு சிகிச்சையை பெறுகின்றனர்.
இந்த அவசரநிலை பிரகடனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் எய்ட்ஸ் அமைப்பின் நிருவாக இயக்குநர் வின்னி பியானிமா , எய்ட்ஸ் (AIDS) பாதிப்பு இன்னும் உலகில் முடிவுக்கு வரவில்லை என்பதை உலகிற்கு உணர்த்தும் எச்சரிக்கையாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு பிஜி அரசாங்கம் எடுத்து வரும் உடனடி நடவடிக்கைகளையும் அவர் வரவேற்றுள்ளார்.
பாதுகாப்பான ஊசி பயன்பாட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தடுப்பு நடவடிக்கைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் பிஜி பாராளுமன்றத்தில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.