மூச்சுத்திணறல் அபாயம் – கொழும்பில் 12,000 கோலி சோடா போத்தல்கள் பறிமுதல்!
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் காணப்படுவதால், கொழும்பில் சுமார் 12,000 கோலி சோடா போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர மேயர் வ்ராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
குறித்த குளிர்பான போத்தல்களின் மூடிகளில் காணப்படும் சிறிய கண்ணாடிக் கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சோதனைகளை முன்னெடுத்து போத்தல்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இவ்வாறான போத்தல்களில் உள்ள சிறிய கண்ணாடிக் கோலிகள் தொண்டையில் சிக்கியதால், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மேயர் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக 109 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்தம் 351,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், பறிமுதல் செய்யப்பட்ட கோலி சோடா போத்தல்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு மேயர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கைகளின் வெற்றியைப் பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்களின் எண்ணிக்கை அல்லது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாறாக, இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப்படக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கையே முக்கியமானது எனத் தெரிவித்த அவர், ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதற்கு இணையாக, அவை நிகழ்வதற்கு முன்னரே தடுத்து நிறுத்துவதும் அவசியமானது என வலியுறுத்தியுள்ளார்.