மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை சிவராசா அனோஜன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட்டன – விஜித ஹேரத் அறிவிப்பு
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவொன்றை அடிப்படையாகக் கொண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கைவிட சவுதி அரேபிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கடந்த 2026 நவம்பர் 9ஆம் திகதி சவுதி அரேபியாவின் அரச சட்டமா அதிபர் திணைக்களம், அனோஜனுக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அவர் எதிர்கொண்டிருந்த எஞ்சிய சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், சவுதி அதிகாரிகளால் அவமதிப்புக்குரியதாகக் கருதப்பட்ட பேஸ்புக் பதிவு தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த செப்டம்பர் 17ஆம் திகதி அனோஜனுக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
எனினும், இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திரத் தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி சவுதி நீதிமன்றம் அந்த மரண தண்டனையை இரத்துச் செய்தது.
இருப்பினும், ஏனைய தண்டனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் அமுலில் இருந்ததால், அனோஜனை முழுமையாக விடுவித்து நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.
இந்நிலையில், சவுதி அரேபிய அரச சட்டமா அதிபர் திணைக்களத்தின் அண்மைய தீர்மானத்தின் மூலம் எஞ்சிய சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் அனோஜன் மீண்டும் இலங்கைக்குத் திரும்புவதற்கான வழி ஏற்பட்டுள்ளது.
அவரை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எதிர்வரும் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குள் அனோஜன் இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இன்று வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று, அவரது விடுதலைக்காகப் பங்களிப்பு வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வெளிவிவகார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வழிகாட்டுதல், வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திரத் தலையீடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அர்ப்பணிப்பான முயற்சிகளே இந்த வெற்றிக்குக் காரணம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவுதி அரேபிய அரசாங்கம், அந்நாட்டு நீதித்துறை, சவுதி மற்றும் இலங்கை இராஜதந்திர அதிகாரிகள், வழக்கில் உதவுவதற்காக சவுதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் குழுவினர் ஆகியோருக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.