மதகுருமார்களின் சிறை ஆடை விவகாரம்: பாராளுமன்றக் குழுவை உடனடியாகக் கூட்ட சஜித் கோரிக்கை!
சிறையில் அடைக்கப்படும் பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மதகுருமார்களின் ஆடை தொடர்பான நடைமுறைகள் மற்றும் சட்ட விதிகளை மறுபரிசீலனை செய்வதற்காக, நல்லாட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபாநாயகர் ஊடாக மேற்பார்வைக் குழுவின் தவிசாளருக்கு ஒக்டோபர் 10 ஆம் திகதியிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 550 ஆம் இலக்க நிலையான கட்டளையின் அமலாக்கம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள அவர், தண்டனை அனுபவிக்கும் மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்த மதகுருமார்கள் சிறைக்குள்ளேயும், வெளிப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும்போதும் அணியும் ஆடைகள் தொடர்பாகத் தற்போது கடுமையான சர்ச்சையும் அதிருப்தியும் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் உரிய நேரத்தில் தலையிட்டுத் தீர்வுகாணத் தவறியமையினால் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள சஜித் பிரேமதாச, நடைமுறையிலுள்ள விதிகளை ஆராய்ந்து தேவையான திருத்தங்களைப் பரிந்துரைக்கும் பொறுப்பு சட்டவாக்கமன்றத்திற்கு உண்டு என வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, நல்லாட்சி, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவைத் தாமதமின்றிக்கூட்டி இது குறித்து விரிவாக ஆராய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், இக்குழுவின் முதலாவது கூட்டத்திற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு , புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலைகள் திணைக்களம் , சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகளையும் அழைக்குமாறு அவர் முன்மொழிந்துள்ளார்.
மேலும், இக்கடதாசி விவகாரத்தின் தேசிய முக்கியத்துவம் மற்றும் உணர்வுபூர்வமான தன்மையைக் கருத்திற் கொண்டு, தாம் இந்தக் குழுவில் உறுப்பினராக இல்லாதபோதிலும், இதன் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறும் சஜித் பிரேமதாச கோரியுள்ளார்.
இச்ச சர்ச்சைக்குத் தீர்வு காணும் வகையில் யோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்து, விவாதங்களில் தீவிரமாகப் பங்களிக்கத் தாம் எதிர்பார்ப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.