கல்முனை வைத்தியசாலையில் ஹிஜாப் தடை: மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடி தீர்ப்பு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய ஆறு முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் பணிநேரத்தில் தலைக்கவசம் மற்றும் சுதேசிய ஆடை அணிவதைத் தடுத்த வைத்தியசாலை நிர்வாகத்தின் நடவடிக்கை, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தீர்ப்பளித்துள்ளது.
இன்று (அக்டோபர் 12) வெளியிடப்பட்ட இந்த விசாரணை அறிக்கையில், குறித்த வைத்தியசாலை நிர்வாகம் சட்டவிரோதமான முறையில் ஊழியர்களின் மத சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதுடன், அவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டி, சட்டப்பூர்வமான தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமையையும் மீறியுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
சுகாதார அமைச்சினால் நியமனம் பெற்ற ஒன்பது முஸ்லிம் பெண் ஊழியர்கள், கடந்த 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியில் இணைந்தனர். அவர்களின் வழிகாட்டல் வகுப்பின் போது, சீருடைக்கு மேலதிகமாக அணியப்பட்டிருந்த தலைக்கவசம் , நீண்ட கைகள் கொண்ட சட்டைகள் மற்றும் காற்சட்டைகளை அகற்றுமாறு வைத்தியசாலை அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது.
குறித்த மத ஆடைகளை அகற்றாவிட்டால் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அச்சுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூவர் ஆடையை அகற்ற உடன்பட்ட போதிலும், ஆறு பெண் ஊழியர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.
மறுப்புத் தெரிவித்த ஆறு ஊழியர்களிடம் சீருடை விதிகளைப் பின்பற்றுவது, வேறு இடத்திற்கு இடமாற்றம் பெறுவது அல்லது பணியிலிருந்து விலகுவது ஆகிய தெரிவுகள் வைத்தியசாலை அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் மனரீதியான சொல்லம்புகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளானதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆணைக்குழுவின் கண்டறிதல்கள்:
அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின்படியே தாம் செயற்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் வாதிட்ட போதிலும், 1989 மற்றும் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் எங்குமே அரச ஊழியர்கள் மத அடிப்படையிலான தலைக்கவசங்களையோ அல்லது கண்ணியமான கூடுதல் ஆடைகளையோ அணிவதைத் தடை செய்யவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், அம்பாறை மாவட்டத்திலுள்ள பிறிதொரு அரச வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்கள் இவ்வாறான ஆடைகளை அணிய எவ்வித தடையும் இன்றி அனுமதிக்கப்பட்டுள்ளதை ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் சுற்றறிக்கைகளைத் தன்னிச்சையாகவும் நியாயமற்ற முறையிலும் தவறாகப் புரிந்து கொண்டு பாகுபாடு காட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒழுக்காற்று விசாரணை எதுவுமின்றி குறித்த ஊழியர்களை இடமாற்றம் செய்த தீர்மானமும் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை அரசியலமைப்பின் 10, 12(1), 12(2), 14(1)(e) மற்றும் 14(1)(g) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத சுதந்திரம், சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் சுதந்திரமான தொழிலில் ஈடுபடும் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள்:
இந்த விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு பின்வரும் முக்கிய பரிந்துரைகளை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது:
சீருடையுடன் சேர்த்து தலைக்கவசம், நீண்ட கைகள் கொண்ட சட்டை மற்றும் காற்சட்டை அணிய ஊழியர்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் எழுத்துப்பூர்வமான வழிகாட்டலை வெளியிடல்.
ஊழியர்கள் மீதான மன உளைச்சல் மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையான விசாரணை நடத்துதல்.
பாதிக்கப்பட்ட ஆறு பெண் ஊழியர்களும் மீண்டும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பணியில் இணைய வாய்ப்பளிப்பதுடன், அவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் மத ஆடைக்கு முழு அனுமதி வழங்குதல்.
அரசாங்கத்திற்குப் பரந்த அளவிலான கோரிக்கை:
வைத்தியசாலைச் சம்பவத்தைக் கடந்து, பொது நிர்வாக அமைச்சிற்கும் ஆணைக்குழு முக்கிய பரிந்துரைய ஒன்றை முன்வைத்துள்ளது. அதன்படி, அரச ஊழியர்கள் தங்களது முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில், சீருடையுடன் சேர்த்து மத ரீதியான ஆடைகளையும் அணிவதற்குத் தெளிவான புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மத ஆடைகளைக் இலக்கு வைத்து விதிக்கப்படும் தன்னிச்சையான கட்டுப்பாடுகள், பணிச்சூழலில் அமைதியின்மையை உருவாக்கி, இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை அதிகரித்து, தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியமை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை வரும் நவம்பர் 11, 2026 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு கல்முனை வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.