பாஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திர லஞ்சம்: சாமர சம்பத் அக்டோபர் 23 வரை விளக்கமறியலில்!
பாஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்கவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னரே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில், பாஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 8.1 மில்லியன் ரூபாயை லஞ்சமாகப் பெற்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இக் குற்றச்சாட்டின் அடிப்படையில், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அக்டோபர் 12 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் திசாநாயக்க, அன்றைய தினமே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.