நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு சீனா உத்தரவு – ஊடகவியலாளர் பாதுகாப்புக் குழு கண்டனம்
நுரையீரலில் புற்றுநோய்க் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சில வாரங்களே கடந்துள்ள நிலையில், மூத்த ஊடகவியலாளர் டொங் யூயுவை மீண்டும் சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு சீன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) தெரிவித்துள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள CPJ, 64 வயதான டொங் யூயுவை உடனடியாக விடுதலை செய்யுமாறும் சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் பீஜிங்கிலுள்ள சிறைச்சாலை மருத்துவமனையில் டொங் யூயு நுரையீரல் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் மீண்டும் சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் CPJ அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, வாரத்திற்கு சுமார் 40 மணிநேரம் ஆடைகள் தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபடுத்தப்படுவதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த CPJ அமைப்பின் ஆசிய – பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பெஹ் லிஹ் யி, பாரிய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சில வாரங்களே கடந்துள்ள 64 வயதான ஒருவரை மீண்டும் சிறைத் தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உளவு பார்த்ததாகச் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் டொங் யூயு சிறையில் அடைக்கப்பட்டிருக்கவே கூடாது என்றும், அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு அனைத்து சிறைத் தொழில் கட்டாயங்களையும் நிறுத்தி, மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டொங் யூயுவுக்கு கடந்த மே மாதம் இதயப் படபடப்பு மற்றும் உடல் எடை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது நுரையீரலில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, ஓகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சை மூலம் குறித்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் பீஜிங்கில் உள்ள இரண்டாவது சிறைச்சாலையிலிருந்து தியான்ஜின் நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாவோபாய் சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
இதனால், முன்னர் குடும்பத்தினர் அவரைச் சந்திப்பதற்கு சுமார் 40 நிமிடங்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டியிருந்த நிலையில், தற்போது இரண்டு மணித்தியாலங்களுக்கும் அதிகமான நேரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசுக்குச் சொந்தமான 'குவாங்மிங் டெய்லி' பத்திரிகையில் ஆசிரியராகவும் கட்டுரையாளராகவும் பணியாற்றிய டொங் யூயு, 2022ஆம் ஆண்டு பீஜிங்கில் ஜப்பானிய இராஜதந்திரி ஒருவருடன் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உளவு பார்த்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
டொங் யூயுவின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் CPJ அமைப்பு, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருதையும் அவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது.
மேலும், CPJ அமைப்பின் 2025ஆம் ஆண்டு சிறைக் கணக்கெடுப்பின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாக சீனா பதிவாகியுள்ளது. அந்நாட்டில் 49 ஊடகவியலாளர்கள் சிறையில் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக CPJ அனுப்பிய மின்னஞ்சல் கேள்விகளுக்கு சீன வெளிவிவகார அமைச்சு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.