நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஐஜிபிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!
கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, நீதிமன்ற உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவறியதாகக் கூறி, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வழக்குக் கோவையை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்ததுடன், நீதித்துறையைத் தவறாக வழிநடத்த பொலிஸார் முயற்சிப்பதாகவும் நீதவான் குற்றஞ்சாட்டியுள்ளார் என பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.
கம்பஹா பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் ஒரே நபருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளே இந்த விவகாரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன.
குறித்த வழக்குகள் போதிய நியாயமான காரணங்களின்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னதாகத் தீர்மானித்த நீதவான், பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தம் இரண்டு இலட்சம் ரூபாவை இழப்பீடாகச் செலுத்துமாறு மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் திணைக்களத்திற்கும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக நியாயமற்ற முறையில் வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தும் சுற்றறிக்கையொன்றைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு ஒக்டோபர் 21ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேல் மாகாண வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரால் ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டல் ஆவணமொன்று பொலிஸ் தரப்பினரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
எனினும், அந்த ஆவணம் மூன்று பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரமே பொருந்துவதாகச் சுட்டிக்காட்டிய நீதவான், நாடு முழுவதிலுமுள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் அசல் உத்தரவு எனத் தெளிவுபடுத்தினார்.
“இது என்னைத் தவறாக வழிநடத்துவதற்கான முயற்சி” என நீதிமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்த நீதவான், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு சுமார் ஐந்து மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தும் பொலிஸார் அதனை நிறைவேற்றத் தவறியமை குறித்துக் கடுமையான அதிருப்தியை வெளியிட்டார்.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக, சம்பந்தப்பட்ட வழக்குக் கோவைகளை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.