நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சந்தேகநபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரிய அறிவிப்பைத் திரும்பப் பெற்றது பொலிஸார்
சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஊடாக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் முறைப்பாடுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 47 வயதுடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பிரசுரிக்கவோ ஒளிபரப்பவோ வேண்டாம் என பொலிஸார் ஊடக நிறுவனங்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சந்தேகநபரைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ் ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை குறித்த சந்தேகநபரைக் கைது செய்யக்கூடாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளுடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபரைக் கண்டறிவதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி பொலிஸார் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவித்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொண்டு, சந்தேகநபரைக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் உதவியைக் கோரி முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பை இனிமேல் பிரசுரிக்கவோ ஒளிபரப்பவோ வேண்டாம் என அனைத்து ஊடக நிறுவனங்களிடமும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், முன்னர் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு வழங்கப்பட்ட அதே முக்கியத்துவத்துடன் இந்தத் தெளிவுபடுத்தலையும் வெளியிடுமாறு ஊடக நிறுவனங்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்மூலம், சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் விடுக்கப்பட்டிருந்த முந்தைய கோரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளது.