ஆறு மாதங்களில் இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 8.7 இலட்சத்துக்கும் அதிகமான TikTok காணொளிகள் நீக்கம்!
இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட 8 இலட்சத்து 71 ஆயிரத்து 446 TikTok காணொளிகள், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சமூக வழிகாட்டுதல்களை மீறியமைக்காக நீக்கப்பட்டுள்ளதாக TikTok நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 89 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் 4 இலட்சத்து 30 ஆயிரத்து 357 காணொளிகளும் நீக்கப்பட்டுள்ளன.
முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் காலாண்டில் காணொளிகள் நீக்கப்பட்ட எண்ணிக்கை 10 ஆயிரத்து 732ஆல் குறைந்துள்ளது. இது சுமார் 2.4 சதவீத வீழ்ச்சியாகும்.
எந்த வகையான காணொளிகள் அதிகளவில் நீக்கப்பட்டன?
TikTok நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு உலகளாவிய அறிக்கையின்படி, நீக்கப்பட்ட காணொளிகளில் அதிகமானவை உணர்வுபூர்வமான அல்லது வயது வந்தோருக்கான உள்ளடக்கங்கள், மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த விடயங்கள், பாலியல் தன்மையைக் கொண்ட செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களாகும்.
உலகளாவிய ரீதியில் நீக்கப்பட்ட காணொளிகளின் வகைப்பாடு வருமாறு:
- 19.5% – உணர்வுபூர்வமான அல்லது வயது வந்தோருக்கான உள்ளடக்கங்கள்.
- 16.1% – மனநலம் மற்றும் நடத்தை சார்ந்த உள்ளடக்கங்கள்.
- 13.8% – உடல் வெளிப்பாடு மற்றும் பாலியல் தன்மையைக் கொண்ட செயற்பாடுகள்.
- 13.7% – பாதுகாப்பு மற்றும் நாகரிக விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்கள்.
- 13.5% – ஆபத்தான செயற்பாடுகள் மற்றும் சவால்கள்.
- 1.8% – தளத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் திருத்தப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள்.
எனினும், இலங்கையிலிருந்து நீக்கப்பட்ட காணொளிகள் எந்தெந்த வகைகளைச் சேர்ந்தவை என்பது தொடர்பான தனிப்பட்ட விபரங்களை TikTok நிறுவனம் வெளியிடவில்லை. மேற்குறிப்பிட்ட சதவீதங்கள் உலகளாவிய தரவுகளாகும்.
மீண்டும் அனுமதிக்கப்பட்ட 33 ஆயிரத்துக்கும் அதிகமான காணொளிகள்
இதற்கிடையில், இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளில் 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 20 ஆயிரத்து 51 காணொளிகளும், இரண்டாவது காலாண்டில் 12 ஆயிரத்து 960 காணொளிகளும் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஆறு மாத காலப்பகுதியில் மொத்தம் 33 ஆயிரத்து 11 காணொளிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டாவது காலாண்டில் இலங்கையில் நீக்கப்பட்ட காணொளிகளில் 99.4 சதவீதமானவை பயனர்களால் முறைப்பாடு செய்யப்படுவதற்கு முன்னரே அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
முதலாம் காலாண்டில் இந்த வீதம் 99.1 சதவீதமாகக் காணப்பட்டது.
எனினும், முன்கூட்டியே அடையாளம் காணப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் நீக்கப்பட்ட காணொளிகளின் வீதம் முதலாம் காலாண்டில் 95 சதவீதமாக இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 93.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இலங்கையில் பதிவேற்றப்பட்ட மொத்த காணொளிகளில் நீக்கப்பட்டவற்றின் வீதம் இரண்டு காலாண்டுகளிலும் 0.5 சதவீதமாகவே பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் 18.8 கோடி காணொளிகள் நீக்கம்
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உலகளாவிய ரீதியில் சுமார் 18 கோடியே 83 இலட்சம் காணொளிகளை TikTok நிறுவனம் நீக்கியுள்ளது.
இவற்றில் 97.4 சதவீதமான காணொளிகள் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தானியங்கி கண்காணிப்புத் தொழில்நுட்பங்கள் மூலம் அடையாளம் காணப்பட்டு நீக்கப்பட்டுள்ளன.
அதே காலப்பகுதியில், உலகளாவிய ரீதியில் 27 கோடியே 84 இலட்சம் கருத்துகள், 14 கோடியே 68 இலட்சம் போலிக் கணக்குகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சொந்தமானவை எனச் சந்தேகிக்கப்பட்ட 2 கோடியே 68 இலட்சம் கணக்குகளையும் நிறுவனம் நீக்கியுள்ளது.
தீங்கு விளைவிக்கும் மற்றும் தளத்தின் விதிமுறைகளை மீறும் உள்ளடக்கங்களை விரைவாக அடையாளம் காண்பதற்கும், பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் தானியங்கி கண்காணிப்பு முறைமைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக TikTok நிறுவனம் தெரிவித்துள்ளது.