“நீங்கள் செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டோம்” – ஜனாதிபதிக்கு அனோஜனின் குடும்பத்தினர் நன்றி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவின் விடுதலைக்கு தலையிட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து, அவரது விடுதலைக்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இலங்கைப் பிரஜைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவது தனது பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அனோஜனின் விடுதலைக்கு ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், இன, மத மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இந்த முயற்சியில் பங்களித்த அனைவருக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தமது மகன் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
தனது மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து அவரை விடுவிப்பதற்கும், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கும் ஆரம்பம் முதலே ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுத்தமைக்காக அனோஜனின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்ட உதவிகளை வழங்குவதற்காக சவூதி அரேபியாவுக்குச் சென்ற சட்டத்தரணிகள் மற்றும் தனது மகனின் விடுதலைக்காக ஆதரவளித்த அனைத்து இலங்கையர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்தும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமது முதலாவது சந்திப்பின்போது அனோஜனின் விவகாரத்தில் தலையிடுவதாக ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் அனோஜனின் பெற்றோர் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும், குறிப்பாக சவூதி அரேபியாவில் பங்களாதேஷைச் சேர்ந்த தம்பதியினர் தூக்கிலிடப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் அவர்களின் மனநிலை மேலும் பாதிக்கப்பட்டதாகவும் ராஜ்குமார் ராஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.