நாட்டின் 20 வனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம்: அரசாங்கம் நடவடிக்கை
இலங்கையின் வனவளப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் "வனஸ்பதி" தேசிய திட்டத்தின் கீழ், சுமார் 9,538 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட 20 வனப்பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தியின் தலைமையில், சாந்தான்ன பகுதியில் அமைந்துள்ள இலங்கை வனவிலங்கு பயிற்சி நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றின் போதே இதற்கான வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மாவட்ட ரீதியில் பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்படும் பகுதிகள்:
நுவரெலியா, கேகாலை, அம்பாறை, பதுளை, வவுனியா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பரந்து காணப்படும் 20 வனப்பகுதிகளே இவ்வாறு பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனம் செய்யப்படவுள்ளன.
அவை வருமாறு:
எல்ஜின் பாதுகாப்பு வனப்பகுதி
பாலங்கல (Balangala)
பம்பரக்கல (Bambaragala)
ரத்தகல (Rathagala)
கஸ்துவெல - அலியகந்த - கடவெலன (Gasthuwela–Aliyakanda–Kadawelana)
சேனகமவ (Senagamuwa)
முதுகல (Mudugala)
ஹிரிஸ்ஸாகல (Hirissagala)
கரந்தகொல்லகும்புற 02 (Karandagollakumbura 02)
வளந்தகும்புற 02 (Walandakumbura 02)
பெரியவட்டக்குளம் 02 (Periyawattakulam 02)
பெரியமடு 02 (Periyamadu 02)
புளியங்குளம் 02 (Puliyankulama 02)
புதுக்குளம் 02 (Puthukulam 02)
வன்னிவிளாங்குளம் 02 (Vannivilankulam 02)
கரவமத்த (Karawamatha)
கல்லிக்குளம் (Kallikulama)
மதவாச்சி (Madawachchiya)
முஸ்காவ (Muskawa)
நாகம (Nagama)
தற்போதைய அரசாங்கம் சுற்றாடல் அமைச்சு மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களம் ஊடாக இதுவரை 93 வனப்பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட காடுகளாக வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.
நாளை வெளியிடப்படவுள்ள 20 புதிய வனப்பகுதிகளின் சேர்க்கையுடன், "வனஸ்பதி" தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை பாதுகாக்கப்பட்ட காடுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்ட மொத்த நிலப்பரப்பு சுமார் 65,000 ஹெக்டேராக அதிகரிக்கும் எனச் சுற்றாடல் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.