தேயிலைப் பயிர்ச்செய்கைக்கு ஏக்கருக்கு ரூ. 10 இலட்சம் வரை காப்புறுதி!
தேயிலை நாற்றுமேடைகள் மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கைகளுக்காக ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரை காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கும் புதிய திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
விவசாயம், கால்நடை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் குறித்த சபை, தேயிலைப் பயிர்ச்செய்கையாளர்கள் எதிர்கொள்ளும் நிதி இழப்புகளைத் தடுப்பதுடன், நாட்டின் தேயிலைக் கைத்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெள்ளம், வறட்சி, மண்சரிவு உள்ளிட்ட கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் சேதங்கள் இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன. அத்துடன், கட்டுப்படுத்த முடியாத நோய்கள் மற்றும் பூச்சித் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட அல்லது வணிக நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட தேயிலை நாற்றுமேடைகள் மற்றும் பயிர்ச்செய்கைகளுக்கு இத்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். எனினும், தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்ச்செய்கை முறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
இதன்படி, தேயிலை நாற்று ஒன்றுக்கு வருடாந்தம் 35 ரூபாய் காப்புறுதித் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புதிய தேயிலைச் செடிகள் நடுகை செய்யப்பட்ட காலம் முதல் அறுவடை ஆரம்பமாகும் வரையிலான அதிகபட்சம் நான்கு வருட காலப்பகுதிக்கு, ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரூபாய் வரை காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தேயிலை நாற்றுமேடைகள் மற்றும் தேயிலைப் பயிர்ச்செய்கைகள் ஆகிய இரண்டுக்கும் காப்புறுதித் தொகையில் 6 சதவீதம் வருடாந்த காப்புறுதிக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் தேயிலைக் கைத்துறையைப் பாதுகாப்பதுடன், தேயிலைப் பயிர்ச்செய்கையாளர்களை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபையின் மாவட்ட அலுவலகங்களைத் தொடர்புகொள்ள முடியும். மேலும், **1918** என்ற அவசரத் தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.