திலீபன் சிலை விவகாரம்: அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் விசாரணை!
யாழ்ப்பாணம் நல்லூரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் சிலை நிறுவப்பட்ட விவகாரம் தொடர்பில், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார்.
குறித்த சிலையை நிறுவுவதற்கான நிதி உதவிகளை வழங்கியவர்கள், சிலை நிர்மாணிப்பில் ஈடுபட்டவர்கள், அதனைப் பிரபலப்படுத்தியவர்கள் மற்றும் சிலை தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் எனக் கூறப்படும் நபர்களிடமே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்தமை விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குறித்த சிலையைப் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், வழக்குப் பொருளாக நீதிமன்றத்திலும் சமர்ப்பித்துள்ளனர். சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி யாழ்ப்பாணம் திலீபன் நினைவுச் சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளே குறித்த சிலை அகற்றப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் உரிய நீதிமன்றத்தில் விடயங்களை அறிக்கையிட்டிருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தடைசெய்யப்பட்ட அமைப்புகளான விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளை ஊக்குவிப்பது இலங்கையின் சட்டங்களின்படி தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.