தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?: மு.க.ஸ்டாலினுக்கு தமிழக முதல்வர் விஜய் கடும் கண்டனம்
தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதற்குத் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் (X) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் அவதூறான மற்றும் அநாகரிகமான கூட்டம் ஒன்றை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்தியுள்ளார். நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி சத்தியபாமா குறித்து உருவக்கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசி அவர் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
திமுக சார்பில் வளர்க்கப்பட்டு வரும் ஆபாச, வன்ம, வக்கிர அரசியலை உருவாக்கியதே தாம்தான் என்பதை மு.க.ஸ்டாலின் பெருமையுடன் மார்தட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்திற்கு விரோதமான திமுகவினரின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் ஆபாசமும் வன்மமும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் காலங்காலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர். பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட பொருட்படுத்தாமல் ஆபாசமாகப் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும், தாராபுரம் தொகுதி மக்களும் விரைவில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தி வரும் திமுகவிற்கு, தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.