டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 9 சதவீதமாக உயரக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
இலங்கையின் பணவீக்க வீதம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 9 சதவீதமாக அல்லது அதற்கும் சற்று அதிகமாக உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பாக இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, 2026 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் பணவீக்க வீதம் ஏற்கனவே 8.3 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், இது முன்னர் கணிக்கப்பட்ட அளவை விட அதிகமானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கிழக்கில் நீடித்துவரும் மோதல் நிலைமை மற்றும் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றமை ஆகியவையே பணவீக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் விளக்கினார்.
2026 மே மாதத்தில் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தபோது, பணவீக்கம் 7 முதல் 8 சதவீதம் வரை உயர்ந்து பின்னர் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், மத்திய கிழக்கில் நிலவிய மோதல் எதிர்பார்த்ததை விட நீண்டகாலம் தொடர்ந்ததுடன், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகளும் உயர்ந்த நிலையிலேயே நீடித்ததால் பணவீக்கம் கணிப்புகளைத் தாண்டி அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டார்.
மோதல் நிலைமை குறுகிய காலத்திற்குள் முடிவுக்கு வந்து, அதன் பின்னர் எண்ணெய் விலைகள் சீரடையும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அண்மைக்காலம் வரை எண்ணெய் விலைகள் உயர்ந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் சுமார் 9 சதவீதமாக அல்லது அதற்கும் சற்று அதிகமாக உயரக்கூடும் என புதிய கணிப்புகள் தெரிவிப்பதாக ஆளுநர் கூறினார்.
எவ்வாறாயினும், 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்கம் படிப்படியாகக் குறைந்து, மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பணவீக்கத்தை விரைவாக இலக்கு மட்டத்திற்குக் கொண்டுவருவது மிகவும் அவசியமானது என வலியுறுத்திய அவர், பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்த நிலையில் காணப்படுவது நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் கொள்வனவு சக்தி ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.