ஞானசார தேரரின் சிறைத்தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானது: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத்தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையை விட இந்தத் தண்டனை மிக அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து இலங்கை பௌத்த மகாசபையினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மாநாட்டில் உரையற்றியபோதே முன்னாள் பிரதம நீதியரசர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்:
"ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை முற்றிலும் சட்டவிரோதமானதாகும். இது ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. தனது நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், தண்டனை வழங்குவதற்கான தனது அதிகாரம் வரம்பிற்குட்பட்டது என்பதால், கடுமையான தண்டனையை வழங்குவதற்காக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளர் பிரீதி பத்மன் சுரசேனவிற்கு நீதவான் கடிதம் எழுதியிருந்தார்.
இங்குதான் சட்டப் பிரச்சினை எழுகின்றது. நீதிமன்ற அவமதிப்பிற்கான தண்டனையானது 1,500 ரூபாவிற்கு மிகையாத அபராதம் அல்லது 18 மாதங்களுக்கு மிகையாத சாதாரண சிறைத்தண்டனையாகும். அதாவது அது ஒன்றரை வருடங்கள் மட்டுமே ஆகும்.
இருப்பினும், சட்டத்தில் 18 மாதங்கள் மட்டுமே தண்டனை வழங்க வழிவகை உள்ள நிலையில், பிரீதி பத்மன் சுரசேன ஆறு வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளார். அந்தச் சட்டப்பிரிவு மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்களுக்கு மட்டுமே பொருந்தும். ஏனைய விவகாரங்களுக்கு அதில் எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை நியாயப்படுத்திப் பேசிய முன்னாள் பிரதம நீதியரசர், அந்த நடவடிக்கை சட்டப்பூர்வமானது என்றும் வலியுறுத்தினார்.
பௌத்த மதம் மற்றும் சிங்கள பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய மாநாட்டில் மகா சங்கத்தினர், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.