ஜஸ்மின், ஒட்டும் தன்மை கொண்ட அரிசி வகைகளுக்கு மாத்திரமே கிலோவுக்கு 280 ரூபாய் இறக்குமதி வரி – அமைச்சர் விளக்கம்!
ஜஸ்மின் அரிசி மற்றும் ஒட்டும் தன்மை கொண்ட அரிசி வகைகளுக்கு மாத்திரமே ஒரு கிலோகிராமுக்கு 280 ரூபாய் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட வரி விதிப்பு நாட்டரிசி உள்ளிட்ட ஏனைய அரிசி வகைகளுக்கும் பொருந்தும் என வெளியான செய்திகள் தவறானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (04) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஜஸ்மின் அரிசி மற்றும் ஒட்டும் தன்மை கொண்ட அரிசி ஆகிய இரண்டு வகைகளும் விசேட வர்த்தகச் சலுகைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றுக்கு வழமையான இறக்குமதி வரியான கிலோவுக்கு 280 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
எனினும், நாட்டரிசி இந்தத் திருத்தப்பட்ட வரி விதிப்புக்குள் உள்ளடக்கப்படவில்லை என வலியுறுத்திய அமைச்சர், வரி விதிப்பு தொடர்பான சரியான தகவல்களை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட அரிசி வகைகளின் இணக்கப்படுத்தப்பட்ட முறைமை (HS) குறியீடுகளைப் பார்வையிடுமாறும் பொதுமக்களையும் ஊடகங்களையும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் அனுமதியுடன் ஜஸ்மின் மற்றும் ஒட்டும் தன்மை கொண்ட அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எனினும், இந்த இறக்குமதிகளைக் கண்காணிப்பதற்கான முறையான ஒழுங்குமுறைப் பொறிமுறை அப்போது நடைமுறையில் இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புக் குழு குறித்த இரண்டு அரிசி வகைகளுக்குமான இறக்குமதி வரியை கிலோவுக்கு 65 ரூபாயிலிருந்து 280 ரூபாயாக அதிகரிக்கத் தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், அரிசி இறக்குமதியின் அளவு, நாட்டின் உள்நாட்டுத் தேவை மற்றும் குறித்த அரிசி வகைகளின் இறக்குமதி உள்நாட்டு அரிசிச் சந்தையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்காக நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த இரண்டு அரிசி வகைகளையும் அவற்றுக்கான HS குறியீடுகளையும் தெளிவாகக் குறிப்பிட்டு நிதி அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வரி அதிகரிப்புக்கு உட்பட்ட அரிசி வகைகள் எவை என்பதைத் தெளிவுபடுத்தாமல் சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அமைச்சர், இந்தத் தீர்மானத்தினால் நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கருத்தையும் நிராகரித்தார்.
அரிசிச் சந்தையில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுடன், அரிசி இறக்குமதியை முறையாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.