“சொக்கத் தங்கம் தேவா!” – ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், வறுமையான காலத்திலும் திரையுலகில் புகழ்பெற்ற பின்னரும் தனது சகோதரர்களைக் கைவிடாத சிறந்த மனிதர் தேவா என உருக்கமாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் தேவா இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது நெருங்கிய நண்பரான தேவா குறித்த நினைவுகளைப் பகிர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள காணொளி பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
அதில் அவர் தெரிவிக்கையில், தனது ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ ஆகிய மூன்று திரைப்படங்களுக்கும் தேவா இசையமைத்ததாகவும், அந்த மூன்று திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
‘படையப்பா’ பட வாய்ப்பை விட்டுக்கொடுத்த தேவா!
‘படையப்பா’ திரைப்படத்தை உருவாக்கியபோது, சில நண்பர்கள் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்குமாறு வலியுறுத்தியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தேவாவிடம் சென்று ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்கலாம் எனத் தான் நினைப்பதாகக் கூறியபோது, தேவா எவ்வித தயக்கமும் இன்றி, “தாராளமாகப் பண்ணுங்கள்” எனத் தெரிவித்ததாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், “நல்ல பையன். புதிதாக நல்ல முறையில் வளர்ந்து வருகிறார். சந்தோஷமாகச் செய்யுங்கள். அந்த மூன்று படங்களையும் உங்களுடன் இணைந்து செய்ததே பெரிய பாக்கியம்” என தேவா மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இதனை நினைவுகூர்ந்த அவர், “கள்ளம், கபடம், பொய், வஞ்சகம் இல்லாத சொக்கத் தங்கம் தேவா” என உருக்கமாகப் புகழ்ந்துள்ளார்.
குடும்பத்தைக் கைவிடாத சிறந்த மனிதர்!
தேவா தனது வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டவர் எனக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், ஐந்து சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அவர், தெருத்தெருவாகவும் திருமண நிகழ்ச்சிகளிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி குடும்பத்தைக் காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் மிகப்பெரிய இசையமைப்பாளராக உயர்ந்த பின்னரும் தனது சகோதரர்களைக் கைவிடாமல் அவர்களையும் தன்னுடன் வைத்துக்கொண்டவர் தேவா எனக் குறிப்பிட்ட அவர், தேவா ஒரு சிறந்த குடும்பத் தலைவராகவும் நல்ல மனிதராகவும் வாழ்ந்ததாகப் பாராட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்கூட, தேவா தனக்கெனத் தனித்துவமான இசைப் பாணியை உருவாக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அழைப்பை ஏற்று இசைக் கச்சேரி நடத்திய தேவா!
சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தன்னிடம் தெரிவித்த தேவா, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருந்த நிகழ்ச்சியைத் தானே தொடங்கி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அந்த அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அதன் பின்னர் தேவா வெளிநாடுகளில் நடத்திய இசைக் கச்சேரிகள் பெரும் வெற்றியைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தையும் முடித்துவிட்டு தேவா தன்னைச் சந்திப்பது வழக்கம் எனக் குறிப்பிட்ட ரஜினிகாந்த், அண்மையில் கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய தேவா தன்னைச் சந்தித்தபோது மகிழ்ச்சியுடன் பேசியதையும் நினைவுகூர்ந்துள்ளார்.
அப்போது, “ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. இளைஞர்கள் அந்த அளவுக்கு வரவேற்கிறார்கள். இந்தச் சந்தோஷத்துடன் இன்னும் பத்து, பதினைந்து வருடங்கள் வாழ்ந்துவிடுவேன்” என தேவா கூறியதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
“சந்தோஷமாக இருக்கும்போதே உங்களைத் தன்னிடம் அழைத்துக்கொண்டார்”
தேவாவின் மறைவு குறித்து வேதனை தெரிவித்த ரஜினிகாந்த், “நீங்கள் ரொம்ப நல்லவர் சார். சந்தோஷமாக இருக்கும்போதே உங்களைத் தன்னிடம் அழைத்துக்கொண்டார்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேவாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாச்சலம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றியில் தேவாவின் இசை முக்கியப் பங்காற்றியது. குறிப்பாக, ரஜினிகாந்தின் திரைப்படங்களில் அவரது பெயர் திரையில் தோன்றும்போது ஒலிக்கும் ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான இசையும் தேவாவின் இசைத் திறமைக்கான தனித்துவமான அடையாளமாக நினைவுகூரப்படுகிறது.