செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுடன் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன – பிரதமர் ஹரிணி
செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கினாலும், அதன் பயன்பாட்டில் முக்கியமான பொறுப்புகளும் உள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய அபாயங்களைக் கையாள்வதுடன், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் கல்வித்துறையை மேம்படுத்துதல், ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல், பொதுச் சேவைகளை வினைத்திறனாக்குதல் மற்றும் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல நன்மைகளைப் பெற முடியும் எனப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், தவறான தகவல்கள், பக்கச்சார்பான முடிவுகள், தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் காணப்படும் சமத்துவமின்மை போன்ற சவால்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், டிஜிட்டல் அறிவாற்றலை மேம்படுத்துவதுடன், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட முடிவெடுப்புகளில் மனிதர்களின் தீர்மானிக்கும் திறன், பொறுப்புக்கூறல் மற்றும் பொதுநலன் ஆகியவை முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாநாடு 2026 நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, 'செயற்கை நுண்ணறிவு, நிலைபேறான வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை முன்னெடுத்தல்' என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அறிவை உருவாக்குதல், விமர்சனச் சிந்தனையை வளர்த்தல் மற்றும் தேசிய சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்குதல் ஆகியவற்றின் ஊடாக நாட்டின் முன்னேற்றத்துக்கு இந்நிறுவனங்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தரமான கல்வியை அனைவருக்கும் சமமாகக் கிடைக்கச் செய்வது நாட்டின் அடிப்படையான பொறுப்பு எனக் குறிப்பிட்ட பிரதமர், அபிவிருத்தியின் நன்மைகள் அனைத்து சமூகங்களையும் சமமாகச் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாக்கங்கள் பொதுநலனுக்கு உதவ வேண்டும், ஆராய்ச்சிகள் தேசிய முன்னுரிமைகளுக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் உருவாகும் வாய்ப்புகள் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இலக்குகளை அடைவதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பும், கூட்டுப் பொறுப்புணர்வும் அவசியம் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக மஹேஷ் கருணாதிலக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகள், தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.