சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் – இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு எச்சரிக்கை
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றப்பட்டு, சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, இவ்வாறான பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இன்று (11) வெளியிடப்பட்டுள்ள பொது அறிவித்தலில், மலேசியா, டுபாய் மற்றும் ஓமான் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி சுற்றுலா விசாவில் சென்றுள்ள பல இலங்கையர்கள் தற்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா விசா என்பது வேலைவாய்ப்புக்கான விசா அல்ல என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சு, சுற்றுலா விசாவில் வெளிநாட்டில் வேலை செய்வது குறித்த நாட்டின் சட்டங்களை மீறும் செயலாக அமையக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
இவ்வாறு பயணம் செய்பவர்கள் கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், நாடு கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதுடன், மோசடிகள் மற்றும் மனிதக் கடத்தல்களுக்கும் உள்ளாகக்கூடும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், வாக்குறுதியளிக்கப்பட்ட வேலை கிடைக்காமை, சம்பளம் வழங்கப்படாமை அல்லது குறைக்கப்படுதல், கடவுச்சீட்டு பறிக்கப்படுதல் மற்றும் நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தல் போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சுற்றுலா விசாவில் வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் அதனை வேலைவாய்ப்பு விசாவாக மாற்றிக்கொள்ள முடியும் அல்லது அங்கு சென்றதும் வேலை பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்படும் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என இலங்கையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் அனைவரும் சட்டபூர்வமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், பயணத்திற்கு முன்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நிதி நலன் மற்றும் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.