‘சீன்’ படத்தின் வெற்றி: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து சூர்யா – ஜோதிகா நெகிழ்ச்சிப் பதிவு
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றிக்காக ஆதரவளித்த ரசிகர்களுக்கு சூர்யாவும், ஜோதிகாவும் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் சூர்யாவுக்கு மூன்றாவது வெற்றிப் படமாக ‘சீன்’ அமைந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வெற்றி குறித்து சூர்யாவும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகாவும் இணைந்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “எங்களது இதயம் நன்றியுணர்வால் நிரம்பியுள்ளது. மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து ‘சீன்’ திரைப்படத்தின் மீது நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும் எங்கள் படக்குழுவினருக்கும், எங்களுக்கும் மிகவும் மதிப்புமிக்கவை.
மிகுந்த நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பு, எங்களது எல்லைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான தைரியத்தை அளிக்கிறது. என்றென்றும் நன்றியுடன் இருக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
‘ழகரம் ஸ்டூடியோஸ்’ சார்பில் சூர்யாவும் ஜோதிகாவும் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், அஜ்மல் சாபு படத்தொகுப்புப் பணிகளையும், சுஷின் ஷியாம் இசையமைப்புப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தில் சூர்யாவுடன் நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம், வசூல் ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.