கொழும்பில் வரி எதிர்ப்புப் போராட்டம்: 6 பேர் கைது
கொழும்பில் அரச வரித் திட்டங்களுக்கு எதிராகவும், பொருட்களின் விலை ஏற்றத்தைக் கண்டித்தும் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஆறு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னணி சோசலிசக் கட்சி மற்றும் 'ஜன அரகல வியாபாரய' (Jana Aragala Viyaparaya) ஆகிய அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டம், பொரளை கெம்பல் பூங்காவிற்கு அருகில் ஆரம்பமாகி, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை நோக்கிச் சென்றது.
அரசாங்கத்தின் கடுமையான வரித் திட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு என்பவற்றுக்கு எதிராகவே இந்தப் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
சட்டவிரோதமாகக் கூடியமை மற்றும் அனுமதி இன்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.