கொஸ்கொட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம், இருவர் கைது
கொஸ்கொட, அகாடிகொட பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து, பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மகா இந்துருவ பகுதியில் துப்பாக்கிச் சூடு ஒன்ற நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த வேலையிலேயே, வாலான ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது அச்சந்தேகநபர்கள் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதாள உலகக் குழுவின் முக்கிய புள்ளிகளான “லோகு பெட்டி” (Loku Patty) மற்றும் “கரந்தெனிய சுத்த” (Karandeniya Sudda) ஆகிய இரு குழுக்களுக்கு இடையே நிலவும் மோதலின் பின்னணியிலேயே இத்தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என புலனாய்வுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் லோகு பெட்டியின் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், கரந்தெனிய சுத்தவின் ஆதரவாளர் ஒருவரைக் இலக்கு வைத்தே இத்தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த அக்டோபர் 1 ஆம் திகதி அஹங்கல்ல, வெலிகந்த பகுதியில் லோகு பெட்டியின் சகோதரரான “பொடி பெட்டி” (Podi Patty) சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.